சீனாவில் நேற்று மாலையில் ஏராளமான மக்கள் ஒரு இடத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும்போது ஒரு கார் மோதி 35 பேர் பலியாகினர். இது சீனாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் கவ்ங்டங் மாகாணத்தில் குஹாய்நகரில் விளையாட்டு அரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மக்கள் உடற்பயிற்சி செய்தனர். குழந்தைகள், பெண்கள் என பலர் அங்கு உடற்பயிற்சி செய்தனர். அப்போது 62 வயதான பென் என்ற நபர் வேகமாக காரை ஓட்டி வந்து அங்கு உடற்பயிற்சி செய்தோர் மேல் காரை ஓட்டிச் சென்றிருக்கிறார். இதில் பலர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 35 பேர் அங்கேயே உயிரிழந்தனர்.
மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இப்படி கூட்டம் உள்ள இடத்தில் விபத்து நடந்தது திட்டமிட்ட செயலாக இருக்குமோ என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.
இதனையடுத்து போலீஸார் விபத்து ஏற்படுத்திய பென் என்பவரை கைது செய்துள்ளனர். பின்னர் இதுதொடர்பாக விசாரணை செய்யப்பட்டது. அவர் தற்போது கோமா ஸ்டேஜில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர், விவாகரத்து செய்ததன் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின்போது ஏற்பட்ட பிரச்னையால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த விபத்து நடைபெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சீன விமானப்படை சார்பில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி குஹாய் நகரில் நடைபெற உள்ள நிலையில், இச்சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தையடுத்து அந்த விளையாட்டு மையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மற்றும் குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.