மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 வகையான இருமல் சிரப்கள்தான் காரணமா என்று உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது.
இந்தியாவில் ஹரியானாவில் சோனிபட் ஊரைச் சேர்ந்த மெய்டென் மருந்தியல் நிறுவனம் தயாரித்த அந்த இருமல் மருந்துகள் நச்சு ரசாயனங்களைக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது;
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நச்சுத் தன்மைக் கொண்ட 4 இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இம்மருந்து காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது.
-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிற்கும் வெளியிலும் பரவியிருக்கலாம் என எச்சரிக்கை தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த விரிவான ஆய்வு தகவல்களை உலக சுகாதார அமைப்பு நம் நாட்டிடம் இன்னும் பகிரவில்லை என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.