செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.818.90 கோடி ஜப்பான் தொழில் முதலீடுகள் ஒப்பந்தம்!

எல்.ரேணுகாதேவி

தமிழ்நாட்டிற்கு தேவையான தொழில் முதலீட்டுகளை ஈர்பதற்காக ஜப்பான் நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “ சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்தொடர்ச்சியாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (JETRO) நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டார்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது சென்னையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி,

*தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் கியோகும்டோ சாட்ராக் (Kyokuto satrac) நிறுவனத்திற்கும் இடையே காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 113 கோடியே 90 லட்சம் ரூபாய் முதலீட்டில் டிரக் வாகனங்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் மிட்சுபா (Mitsuba) நிறுவனத்திற்கும் இடையே, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் மிட்சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையை 155 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஷிமிசு (Shimizu Corporation) நிறுவனத்திற்கும் இடையே, கட்டுமானம், கட்டுமான பொறியியல் மற்றும் அதன் தொடர்புடைய வணிகத்தை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் கோயீ (Kohyei) நிறுவனத்திற்கும் இடையே 200 கோடி ரூபாய் முதலீட்டில், பாலிகார்பனேட் தாள் தயாரித்தல், கூரை அமைப்புகள் தயாரித்தல், காட்டுமானத் துறையில் பயன்படுத்த எலக்ட்ரானிக் கூறுகளுக்கான என்ஸ்ட்ருஷன் லைன்கள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சடோ –ஷோஜி மெட்டல் வர்க்ஸ் (Sato Shoji Metal Works) நிறுவனத்திற்கும் இடையே 200 கோடி ரூபாய் முதலீட்டில் விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கட்டுமான உபகரணங்கள் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர எஃகு பாகங்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

* தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்குட் டஃபல் (Tofle) நிறுவனத்திற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் சோலார், எஃக ஆலைகள், விண்வெளி மற்றும் குறைக்கடத்தி தொழில்களுக்கான துருப்பிடிக்காத எஃகு சிறப்பு நெகிழ்வான குழல்களை உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

என மொத்தம் 818.90 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அரசு உயர் அதிகாரிகள், ஜப்பான் முதலீட்டாளர்கள் உடனிருந்தனர்.

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

வாங்க விமானத்தில் பறக்கலாம்!

ஹேர் கலரிங் பண்ணிக்கொள்ள ஆசையா? கவனிக்க வேண்டியது என்ன? எந்த வகையான கலரிங் நல்லது?

சிரித்து வாழ வேண்டும்!

உடலை இலகுவாக வைக்கும் ஆரோக்கிய உணவுகள்!

SCROLL FOR NEXT