மாணவி பிரியா மரணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிஸ்வாமி விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ம.சுப்ரமணியம் விளக்கம் அளித்திருந்தார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியா காலில் ஏற்பட்ட வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருந்துவமனையில்சோர்க்கப்பட்ட நிலையில் தவறான சிகிச்சை காரணமாக கால் அழுகியதாக சொல்லப்படுகிறது. பின்னர் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் கால் எடுக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் .
இது குறித்து விளக்கமளித்த ம.சுப்ரமணியம் மாணவி பிரியா மரணத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டது. இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான், இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு அனைத்து மருத்துவர்களும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர்
அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் அரசு மருத்துவத்தைக் குறைத்துக் கூறுவது வருத்தத்துக்குரிய செயலாக இருக்கிறது. இதில் சமூக ஊடகம், சமூக வலைதளத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
மேலை நாடுகளில் அறுவை சிகிச்சை செய்யும் போது, அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவர்களுக்கு செக்-லிஸ்ட் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யப்படும். அதேபோல், தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்டவற்றில் அறுவை சிகிச்சை நடைபெறும் அரங்கில் செக்-லிஸ்ட் டிஜிட்டல் முறையில் திரையிட வருங்காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.ஆர்.பி முறையில் பணியமர்த்தப்பட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால் அவுட்சோர்சிங் முறையில் பணி அமர்த்தப்படும் போது இட ஒதுக்கீட்டை மையமாக வைத்துப் பணி அமர்த்தப்படாததால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்யச் சட்டத்தில் இடமில்லை. அதனால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள 708 இடங்களில் நகர்ப்புற நல வாழ்வு மையம் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கிறது. அங்கு ஒரு மருத்துவர் ,ஒரு செவிலியர் ஒரு மருந்தாளுநர், ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணி அமர்த்தப்படுவார்கள்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார். அவர் ஆட்சியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்பதை அவரே தெரிவிக்க வேண்டும். தற்போது, அவர் மருத்துவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாரா?... மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்கிறாரா... அல்லது யார் மீது அவர் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். யார் மீது குற்றம் சாட்டுகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்' என்று தெரிவித்தார் ம.சுப்ரமணியம்