அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள Verkada என்ற நிறுவனம் மதியம் 3 மணிக்குமேல் 3 ஊழியர்கள் சேர்ந்து வெளியே சென்று உணவருந்தலாம் என்ற விதியைக் கொண்டுவந்துள்ளது. அவர்கள் அப்போது வெளியே சென்று சாப்பிடும் அனைத்து உணவுகளுக்கும் செலவை அந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளுமாம். இதனை 3-3-3 perk என்று அந்த நிறுவனம் அழைக்கிறது.
சென்ற ஏப்ரல் மாதம் முதல் அந்த நிறுவனம் இந்த விதியைக் கொண்டுவந்தது. 3-3-3 perk மூலம் மூன்று ஊழிய நண்பர்கள் சாப்பிட வெளியே சென்று நிறுவனத்தைப் பற்றியோ அல்லது நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றியோ கலந்துரையாடிக் கொள்ளலாம். அதேபோல் என்ன கதை வேண்டுமென்றாலும் பேசலாம்.
இதற்கு அந்த நிறுவனம் 30 டாலர்களை அந்த மூன்றுப் பேருடைய செலவுக்கு வழங்குகிறது. அதாவது இந்திய மதிப்பில் 2, 486 ரூபாயாகும். இந்தத் திட்டத்தை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிறுவனம் 3.5 பில்லியன் மதிப்புள்ள நிறுவனமாகும். அதேபோல் சென்ற ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை 1,800 பேர் குறைந்தது ஒருமுறையாவது இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதுத்தொடர்பாக இந்த நிறுவனத்தின் சிஎஃப்ஓ கேமரூன் ரெசாய் கூறுகையில், “அதாவது, இதன்மூலம் மதியம் மூன்று பேர் வெளியே சென்று சுற்றிப்பார்த்துக்கொண்டே நல்ல ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் வேலைப் பற்றி பேசுவார்கள். நிறைய யோசனைகள் அவர்களுக்குத் தோன்றும். அது நிறுவனத்திற்குத்தான் பயனளிக்கும். ஆகையால்தான் நிறுவனம் சார்பாகக் காசு கொடுத்து வெளியே அனுப்பி வைக்கிறோம்” என்று கூறினார்.
அதேபோல் அந்த நிறுவனத்தின் சிஎஃப்ஓ ஃபிலிப் கலிஸான் கூறுகையில், “அவர்கள் வெளியே சென்றுப் பேசுகையில் பணித் தொடர்பாக உரையாடுவது அதிகரிக்கும். அதனால் எங்கள் நிறுவனத்தால் 100 பில்லியன் மதிப்புள்ள நிறுவனங்களுடன் போட்டியிட முடியும். திட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள் 3-3-3 என்ற சேனலில் அவர்களின் போட்டோவைப் பதிவு செய்வார்கள். பட்ஜட்டைத் தாண்டி ஊழியர்களின் உற்சாகத்தை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் வெற்றியாகக் கருதப்படுகிறது” என்று பேசினார்.