மணிப்பூரில் 2 நாள் ஆய்வு மேற்கொள்ளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நடைபெற்றுவரும் நிலையில், அதனுடைய உன்மை நிலை குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு நாளை (ஜூலை 29) மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் 3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். கோயில்கள், தேவாலயங்கள் சூறையாடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு இந்தியாவின் மோசமான வரலாறுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது மணிப்பூர். நாடாளுமன்றத்தில் இது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மணிப்பூருக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டு, அறிக்கை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கொறடா மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மணிப்பூர் செல்வதற்கான முடிவை எடுத்துள்ளோம். ஜூலை 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூருக்கு நேரில் சென்று பார்வையிட்டு விரிவான அறிக்கையை அளிக்க உள்ளோம். மணிப்பூரில் நடைபெற்று இருப்பது இன கலவரம். இந்த ஆய்வில் 20 மேற்பட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்.
மேலும் சேத மதிப்பீடு, மக்களின் இன்றைய நிலை, நடந்த வன்முறைகள் குறித்தும் மக்களிடம் கேட்பதற்கும் கலந்துரையாடவும் இந்த வாய்ப்பை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் மணிப்பூர் செல்ல இருந்தனர். ஆனால் அப்போதைய சூழல் காரணமாக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு மணிப்பூர் நிலை குறித்த ஆய்வு செய்ய செல்ல உள்ளது என்று கூறினார்.