அமெரிக்காவில், எந்தவித குற்றமும் செய்யாத நபர் ஒருவர் 47 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டு, நிரபராதி என தனது 72 வயதில் நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1975 ஆம் ஆண்டு நியூயார்க்கில் அமைந்துள்ள கிரீன்பார்கில் வசிக்கும் பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கருப்பினத்தைச் சேர்ந்த லியோனார்ட் மேக் என்ற நபரை குற்றவாளி என போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் தான்தான் குற்றத்தை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டார். அந்த காலத்தில் டிஎன்ஏ பரிசோதனை நடைமுறை இல்லை என்பதால், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுமே, பல பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் Innocence என்று சட்டம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது இந்த சட்டத்தின் மூலம் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்மையிலேயே குற்றம் செய்தவர்கள் தானா என்பதைக் கண்டறிந்து விடுக்கப்படுவார்கள். அந்த வகையில் பாலியல் குற்றம் செய்த லியோனார்ட் மேக்கிற்கு DNA பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் இவர் குற்றம் செய்யவில்லை என்பது நிரூபணம் ஆனது. இதையடுத்து அவருடைய தண்டனை ரத்து செய்யப்பட்டு தனது 72வது வயதில் சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட அவர் வாழ வேண்டிய அரை நூற்றாண்டு காலத்தை அவர் சிறையிலேயே கழித்துவிட்டார். 72 வயதில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டவருக்கு அந்த நாடு என்ன செய்யப்போகிறது? என பல கேள்விகள் எழுந்து வருகிறது.
விடுதலை செய்யப்பட்ட லியோனார்ட் மேக் தற்போது மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய விடுதலை என்ற அமைப்பு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், "அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கருப்பினத்தவர்கள் மிகவும் குறைவு என்றாலும், 1989 முதல் 2022 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 3300 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருப்பினத்தவர்களாவர்.
அத்துடன் 1989ம் ஆண்டு டிஎன்ஏ பரிசோதனைகளில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 575 கைதிகள், தற்போது குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் 35 பேர் மரண தண்டனைக் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது". எனவே எந்த அளவுக்கு நிறவெறி மக்களை துன்புறுத்தியுள்ளது என்பதை இந்த நிகழ்வின் மூலம் நம்மால் அறிந்தகொள்ள முடிகிறது.