மின் இணைப்பு கணக்கை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசித் தேதி, பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது. ஜனவரி 31 தேதிக்குள் ஆதார் இணைப்பை செய்து முடிக்கும்படி முன்னர் கெடு தந்திருந்தது. இந்நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்சார வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 9 சதவீத கணக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க வேண்டியிருக்கிறது. எனவே, இதுவே கடைசி நீட்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்தார். முன்னதாக மின்வாரியத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், இதுவரை எத்தனை பேர் ஆதார் கணக்கை வெற்றிகரமாக இணைத்திருக்கிறார்கள் என்பது குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முழுவதும் 2.67 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன. இதுவரை 2.42 கோடி மின் இணைப்புகளோடு ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறது. 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதார் இணைப்பை செய்து முடித்திருக்கிறார்கள். இனி 5 லட்சம் விவசாயிகள் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடிசைகளுக்கு தரப்பட்டுள்ள மின் இணைப்பு கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதுதான் மந்தகதியில் நடந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். 9 லட்சத்திற்கும் அதிகமான இணைப்புகளில் 5 லட்சம் கணக்குகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
டீமானிடைசேஷன் சம்பவத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கியூவில் நின்ற சம்பவம் சென்ற ஆண்டு நடந்தது. மின் இணைப்பு கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்கவேண்டியது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த காரணத்தால் இசேவை மையத்திற்கு முன்னர் மக்கள் குவிந்தார்கள்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பெரும்பாலான மக்கள் தயங்கினார்கள். இணைக்காவிட்டால், மானியம் பாதிக்கப்படுமா? ஒன்றுக்கு மேற்பட்ட மின்சார இணைப்புகளை கொண்டிருக்கும் குடியிருப்புகளுக்கு தடை ஏற்படுமா? வீட்டின் உரிமையாளர் பெயரில் மின் இணைப்பு இல்லாவிட்டால் என்ன பாதிப்பு? என்று எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு மின்சார வாரியம் ஏற்கனவே பதிலளித்திருக்கிறது.
ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் சில இடங்களில் இன்னும் நீடிக்கின்றன. மின் கட்டணத்தை கணக்கிடுவது போல் வீடு தேடி வந்து ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக 100 சதவீத இலக்கை எட்ட முடியும் என்கிறார்கள். பிப்ரவரி 15 தேதிக்குள் செய்து முடிக்க முடியுமா? சவாலான விஷயம்தான்.