நடிகர் விஜய் இயக்கிய புதிய கட்சியான த.வெ.க கட்சியின் கொடிச்சின்னத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியைத் தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்தார். வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தனது 69வது படத்துடன் தனது சினிமா பயணத்தை முடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கினார் விஜய். இன்னும் சில காலங்களில் கட்சியின் சின்னம் அறிவிப்பதாக செய்திகள் கசிந்தன.
கட்சியின் முதல் பெரிய மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கும் எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்திலேயே மாநாடு நடத்த சிக்கல் ஏற்பட்டது. மாநாட்டுக்காக இடம் தருவதாக ஒப்புக்கொண்ட உரிமையாளர்கள், பிறகு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே விஜய் மாநாடு நடத்த இருப்பதாகவும், இதற்காக இடம் தேர்வு உள்ளிட்டவை முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதம் இறுதியில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே கட்சிக் கொடி மற்றும் சின்னம் ஆகியவை அறிவிக்கப்பட்டுவிடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனெனில், மாநாடு முன்னதாக தமிழகம் முழுவதையும் கொடியால் மாஸ் காட்டிவிடலாம் என்பது திட்டம்.
அந்தவகையில் 12 முதல் 15ஆம் தேதிக்குள் கட்சி சின்னம் மற்றும் கொடியை தவெக விஜய் அறிமுகம் செய்துவைப்பார் என்று தெரிகிறது.
கட்சியின் கொடியில் ஒரு மலர் குறிப்பாக இடம்பெறபோவதாக விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. அதாவது கட்சியின் பெயரில் வெற்றி என்ற சொல் இருப்பதால், அந்த சொல்லை குறிக்கும் மலரையே கொடியில் வைக்கப்போகிறார்களாம். ஆம்! முன்னரெல்லாம், வீரர்கள் வெற்றிபெற்று திரும்பினால், வாகை மலர் சூடி வருவார்களல்லவா? அதேபோல், த.வெ.க. கட்சியின் கொடியிலும் வாகை மலர் இடம்பெறபோவதாக சொல்லப்படுகிறது.