தமிழக உயர்க்கல்விதுறை அமைச்சர் பொன்முடியின் வீடுகளில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீடு, விழுப்புரத்தில் இருக்கும் அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தொடர்ந்து 13 மணி நேரம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அது மட்டுமின்றி, அமைச்சர் பொன்முடியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை செய்தனர்.
அமலாக்கத்துறையினரின் இந்த சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக, சிஆர்பிஎஃப் படை வீரர்களின் துணையுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் பொன்முடி தனது சொந்த காரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மகன் கவுதம சிகாமணியும் அமலாக்கத்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறையின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இல்லத்துக்கு வெளியே காத்திருந்த திமுக தொண்டர்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தங்களது வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர்.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று நடத்திய இந்த அதிரடி சோதனையில், 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 70 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட, மொத்தம் 80 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.