தமிழக பா.ஜ.க கட்சித்தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும் நடைபயணம் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகும் நடைபயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். சென்னையில் நிறைவடையும் யாத்திரையின் இறுதிநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
'என் மண் என் மக்கள்' என்னும் முழக்கத்தோடு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக நான்கு மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நடைபயணம், தற்போது ஆரம்பமாகவிருக்கிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தில் ஆரம்பமாகும் நடைபயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐந்து கட்டங்களாக நடைபெறவிருக்கும் யாத்திரையை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமாக பயன்படுத்த பா.ஜ.க கூட்டணி முடிவு செய்திருக்கிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை குறித்து நடைபெறும் முதல் கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.
ஊழலற்ற அரசு என்கிற கோஷத்தை முன்வைத்து நடைபெறும் நடைபயணத்தில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் மோடி அரசின் சாதனைகளை சொல்லும் பொதுக்கூட்டமும் நடைபெறும். பா.ஜக அரசின் சாதனைகளை புத்தகமாகவும் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இறுதிக்கட்டமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபயணம் நிறைவடையும். நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பா.ஜ.கவுக்கு நடைபயணம் உதவும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக அரசியலில் நடைபயணம் என்பது ராஜாஜி காலம் தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்பதுகளில் நீதி கேட்டு நெடும்பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரை கருணாநிதி பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறார். பின்னாளில் வை.கோ தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். இப்போது பா.ஜ.கவின் முறை.