துருக்கி சிரியா எல்லைப் பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியிருந்தன. கடந்த இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரு நாட்டு எல்லைப் பகுதியில் நேற்றிரவு இந்திய நேரப்படி, 10.54 நிமிடங்களுக்கு அடுத்தடுத்து மீண்டும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5.8 அலகுகளாக பதிவாகியிருந்தன. இதில், துருக்கியில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 213 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சுலேய்மான் சோய்லு தெரிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். சிரியாவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துருக்கியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தில், துருக்கியில் மட்டும் 40,689 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 3688 பேரும் உயிரிழந்தனர். துருக்கியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் நேற்று நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர், நிலநடுக்க சமயங்களில் இந்தியாவின் விரைவான செயல்பாட்டை ஒட்டுமொத்த உலகமும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
உலகில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும், அதற்கு பதில் நடவடிக்கையை மேற்கொள்வதில் முதல் நாடாக இந்தியா திகழ்வதாகவும் அவர் கூறினார். உலகில் தலைசிறந்த நிவாரணம் மற்றும் மீட்புக்குழு என்ற அடையாளத்தை வலுப்படுத்த நாம் முயற்சிக்க வேண்டும் என்று நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். நம்மை நாமே எவ்வாறு தயார்படுத்திக் கொள்கிறோமோ, அதற்கு ஏற்ப உலகுக்கு சிறப்பாக சேவையாற்ற முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.