கடந்த சில ஆண்டுகளாகவே செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வித்தியாசமான பொருள் ஒன்று இருப்பதை நாசாவின் ரோவர் படம் பிடித்துள்ளது.
பூமியைப் போலவே வேறு ஏதாவது கிரகத்தில் உயிர்கள் இருக்கிறதா? அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறதா? என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தில், உயிர்கள் வாழ வாய்ப்புள்ளதா என்ற ஆராய்ச்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் மற்ற கோள்களை விட, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்றும், ஒருவேளை மனிதன் பூமியை விட்டு மற்ற கிரகத்திற்கு குடியேறும் நிலை ஏற்பட்டால், அது செவ்வாய் கிரகமாகத்தான் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது எனவும் அவர்கள் கூறுவதால், செவ்வாய் கிரகம் சார்ந்த ஆய்வு மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'Perseverance' என்ற ரோவர் விண்ணில் ஏவப்பட்டது. அது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் முக்கியமான பகுதிகளின் படங்களை இதுவரை இந்த ரோவர் அனுப்பியுள்ளது. அந்தப் படங்களை வைத்து, செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், Perseverance ரோவர் புதிதாக அனுப்பிய புகைப்படத்தில், நடுவில் துளையுடன் ஒரு பெரிய பாறை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தென்பட்ட இந்த வித்தியாசமான பாறையை பார்த்த இணையவாசிகள் தங்களின் கற்பனை குதிரையைப் பறக்கவிட ஆரம்பித்துவிட்டனர்.
அதாவது, இது குறித்து ஒரு நெட்டிசன் கூறுகையில், "ஒருவேளை இது ஏலியன் பயன்படுத்திய கழிவரையாக இருக்கலாம்" என, ஜேம்ஸ் கேமரூன் ரேஞ்சுக்கு கதையை அளந்து விட்டுள்ளார். இன்னும் சிலர் "இது ஏலியன்களின் முட்டை" என பதிவிட்டுள்ளனர். இப்படி பலரும் பலவிதமாக கருத்துக்களைக் கூறி வந்தாலும், இது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பாறை அல்லது விண்கல்லாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.