அருணாச்சலம் சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அம்மாநிலத்தின் முதல்வர் உட்பட 6 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தாண்டு அருணாச்சலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறவிருக்கின்றன. அந்தவகையில் இந்த மாநிலத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளும் 2 மக்களவைத் தொகுதிகளும் உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் இந்த 60 தொகுதிகளிலுமே பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி 29 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் அருணாச்சல மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுவந்தது. அந்தவகையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி முடிவடைந்தது. இந்தநிலையில்தான் நேற்று வரை மாநிலத்தின் 6 தொகுதிகளிலும் ஒரே ஒரு கட்சி மட்டும்தான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. அதில் அருணாச்சல முதல்வர் பெமா காண்டு உட்பட 6 பாஜக வேட்பாளர்கள் மட்டுமே எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இல்லாமல் வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தனர். எந்த எதிர்க்கட்சிகளும் போட்டியிட முன்வராததால் அந்த ஆறு பாஜகவினர் போட்டி இன்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆகையால் பாஜகவினர் 6 பேர் போட்டியின்றி MLA ஆகியுள்ளனர்.
அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்ததைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீடித்துள்ளதால், இன்னும் சில வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று முதல்வர் பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
அருணாச்சலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 2ம் தேதி நடைபெறவுள்ளது. அதேபோல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் 41 பாஜக உறுப்பினர்களும் 7 ஜேடியு உறுப்பினர்களும் தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.