சந்திராயன் 3 விண்வெளியில் தரையிறங்கி சாதனை படைத்து இன்றுடன் 1 ஆண்டு நிறைவு பெற்றது. இந்த நாள்தான் தேசிய விண்வெளி நாளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் நிலவின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான்-3 லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கியதற்காக இஸ்ரோ சார்பில், குடியரசு தலைவர் முர்முவிடம் இருந்து விக்யான் குழு விருதை பெற்றார் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்.
இந்தியா உட்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு வரும் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசா இல்லாமல் 6 மாதங்கள் வரையில் இலங்கையில் தங்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் முதியோர் மருத்துவமனை ஏற்கனவே செயல்படும் நிலையில், அங்கு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
'வாழை' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், "அனைவருக்கும் அன்பின் வணக்கம், இன்று என் நான்காவது திரைப்படமான 'வாழை' வெளியாகிறது. வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்திலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் 89.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ஆம் இடம் பிடித்தார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.