தனது கடுமையான காவல்துறை விசாரணை முறையினால் ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்திருந்த காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது டி ஜி பி சைலேந்திர பாபு, உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள விஷயம் பாதிக்கப்பட்டவர்களிடையே சற்றே மன ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
அம்பாசமுத்திரத்தில் காவல் விசாரணை வன்முறையின் கொடூரமான செயல்கள் நடந்ததாகக் கூறப்படும் ஒரு நாள் கழித்து, டி ஜி பி சி சைலேந்திர பாபு, திங்களன்று உடனடியாக அமலுக்கு வரும் வகையில், உதவிக் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்கை தலைமை அதிகாரி உடனடியாக சஸ்பெண்ட் செய்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றினார்.
அதற்குத் தேவையான கூடுதல் பொறுப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு தென் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஸ்ரா கர்க் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
போலீஸ் காவலில் இருந்த 10 பேரின் பற்களை பிடுங்கியதாகவும், இருவரின் விதைப்பைகளை நசுக்கியதாகவும் ஏஎஸ்பி மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்காக அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் விக்ரமசிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு அழைத்து வரப்பட்ட பலர் பாலவீர்சிங் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
காவல் துறையின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி கலெக்டர் கே.பி.கார்த்திகேயன் இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் மற்றும் சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது ஷபீர் ஆலம் இருவருக்கும் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் “கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளானவர்களுக்கும், அப்போது பணியில் இருந்த காவலர்களுக்கும் ஆலம் சம்மன் அனுப்பியுள்ளார். மேலும், ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு பணியாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
உதவிக் கண்காணிப்பாளர் பல்வீர்சிங்கின் வன்முறையான விசாரணை முறை குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்ட போது,
முதலில் பேசிய நபர் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக தன் மனைவி தன் மீது காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த வாரத்தில் ஒருநாள் விக்கிரசிங்கபுரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏ எஸ் பி பல்வீர் சிங், சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் உட்பட 6 காவல்துறை அதிகாரிகளால் தான் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். சித்திரவதை என்றால், பற்களைப் பிடுங்குவது, காதுகளைத் துண்டிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்கள் என்னை மிரட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்டனர் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். விசாரணை நடந்த இடத்தில் சிசிடிவி காமிராக்கள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அத்துடன் குடும்பத் தகராறு காரணமான புகாருக்கான விசாரணை போல அல்லாமல் ஏதோ மிக மோசமான குற்றவாளி போலத் தன்னை அவர்கள் நடத்தினார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
“மேலும், விசாரணையின் போது பல்வீர் சிங் என்னிடம் இந்தியில் பேசினார், எனக்கு அவர் பேசியது எதுவுமே புரியவில்லை. அவர் என்னை ஒரு கடுமையான குற்றவாளி போல நடத்தினார். நான் படிக்க அனுமதிக்கப்படாத இரண்டு ஆவணங்களில் என் கையெழுத்து மற்றும் கைரேகைகளை போலீசார் எடுத்த பின்னர் மாலையில் நான் விடுவிக்கப்பட்டேன். அவர்கள் என் மீது எப்ஐஆர் பதிவு செய்தார்களா என்பது கூட எனக்குத் தெரியவில்லை,'' என்றும் தெரிவித்திருந்தார்.
"கிராம நிர்வாக அதிகாரியால் சம்மன் அனுப்பப்பட்ட கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மேலும் சிலர், காவல்துறையினருக்கு எதிரான விசாரணைக்கு ஆஜராக அச்சம் தெரிவித்தனர்" என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வழக்கறிஞர் மகாராஜன், பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கவும், அவர்களைப் பாதுகாக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.