முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிலுரையுடன் இன்று நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் திருத்த சட்ட முன் வடிவு இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் கடந்த ஒன்பதாம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையுடன் தொடங்கிய அன்றே ஆளுநர் தமிழ்நாடு அரசின் அறிக்கையின், ஒரு சில பகுதிகளை விட்டு விட்டும், சேர்த்தும் படித்ததாக பிரச்சினை கிளம்பியது.
அதனை தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அன்றைய தினம் முன்மொழிந்து அவையில் நிறைவேறியது.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடங்கி உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். நேற்று திமுக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய நிலையில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பதிலுரை அளிக்க உள்ளார்..
இறுதி நாளான இன்று வினாக்கள் விடையுடன் தொடங்கும் சட்டசபை நிகழ்வுகள் முதலமைச்சர் பதில் உரையுடன் நிறைவடைகிறது. அதில் மிக முக்கியமாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் திருத்தச் சட்ட முன்வடிவை அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் முன்மொழிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.