தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திபாரா மேம்பால சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. நுங்கம்பாக்கம், விருகம்பாக்கம், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கத்திரபாரா பாலத்தின் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளதால் கார், இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக செம்மஞ்சேரி ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றனர்.
இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.