ஆஸ்திரேலியாவுக்கு பிரிட்டிஷிடமிருந்து விடுதலை கிடைத்து 123 ஆண்டுகள் ஆனாலும் அது குடியரசு நாடாக மலரவில்லை. இன்றும் ஆஸ்திரேலியாவின் அரசு தலைவராக பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் இருக்கிறார். பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராக அவ்வப்போது ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிமக்களும் ஆஸ்திரேலிய மக்களும் போராடுகின்றனர். ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் குடியேற்றம் தொடங்கிய போது அங்கு பூர்வ குடிகளாக இருந்த லட்சக்கணக்கான பழங்குடியின மக்களை கொன்று குவித்தது பிரிட்டிஷ் முடியாட்சி.
ஆஸ்திரேலிய பூர்வகுடி பெண்ணான செனட்டர் (பாராளுமன்ற உறுப்பினர்) லிடியா தோர்ப் தங்களின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடுகிறார். தனி ஒரு பெண்ணாக பூர்வகுடி மக்களின் உரிமைகள் , அவர்களின் மொழியை பாதுகாக்க தொடர்ச்சியாக செனட்டில் முழக்கம் இடுகிறார். மூன்று தலைமுறைகளாக லிடியா தோர் குடும்பத்தினர் பழங்குடியின மக்கள் நலனுக்காக போராடி வருகின்றனர். லிடியாவின் பாட்டியான அல்மா தோர்ப்பும் பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் ஆவர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் மற்றும் கமீலா ஆகியோர் ஆஸ்திரேலியா செனட் சபைக்கு வருகை தந்தனர். அப்போது ஆவேசமடைந்த லிடியா தோர்ப் "எங்கள் மக்களை நீங்கள் இனப்படுகொலை செய்தீர்கள், எங்களிடமிருந்து நீங்கள் திருடியதை எங்களுக்குக் கொடுங்கள். எங்கள் எலும்புகள், எங்கள் மண்டை ஓடுகள், எங்கள் குழந்தைகள், எங்கள் மக்கள். எங்கள் நிலத்தை அழித்து விட்டீர்கள். எங்களுக்கு குடியரசு ஒப்பந்தம் கொடுங்கள். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறோம்" என்று முழக்கமிட்டார் சுதந்திர தாகமிக்க அந்த வீரப் பெண்.
பாதுகாப்பு அதிகாரிகள் சார்லசை நெருங்க விடாமல் லிடியாவை தடுத்து நிறுத்திய போது, சார்லஸ் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் உடன் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். “இது உன் நிலம் அல்ல, நீ எனக்கு அரசனும் அல்ல” என்று தோர்ப் மீண்டும் ஆவேச முழக்கமிட்டதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகளால் செனட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
சர்லசுடன் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் நாடு குடியரசாக மாற வேண்டிய நேரம் இது என்று கூறினார். "எங்கள் நாட்டு அரசியலமைப்பு, எதிர்காலம் மற்றும் அரசாட்சியுடன் எங்கள் உறவின் தன்மை குறித்து நாங்கள் விவாதித்த காலங்களிலும் கூட, நீங்கள் ஆஸ்திரேலியர்களுக்கு மிகுந்த மரியாதை காட்டியுள்ளீர்கள்" ஆனால், இன்னும் குடியரசாகவில்லை என்று இடித்துரைத்தார்.
ஆஸ்திரேலியாவின் ஆறு மாநில முதல்வர்கள், தங்கள் நாட்டு உச்ச தலைவரான பிரிட்டிஷ் சர்லசை வரவேற்க விரும்பாமல் புறக்கணித்தனர். ஒவ்வொரு முதல்வரும் சார்லஸை வரவேற்பதை விட தங்களுக்கு முக்கியமான வேலைகள் இருப்பதாக கூறி மறுத்து விட்டனர்.
1999 இல் பொது வாக்கெடுப்பு ஒன்று நடந்தது. அதில் ஜனாதிபதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களாலா? அல்லது செனாட்டர்களாலா? என்ற கருத்து வேறுபாட்டில் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அரச தலைவர் ஆனார்.
ஆஸ்திரேலிய குடியரசு இயக்கம், ஆஸ்திரேலியா பிரிட்டனுடனான அதன் அரசியலமைப்பு உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று விரும்புகிறது. அல்பானீஸ் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் அவரது தொழிலாளர் கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.