குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாட்டின் 74வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகச்சியில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபக்தா எல் சிசி கலந்து கொள்ள இருக்கின்றார். நமது நாட்டின் குடியரசு தின விழாவுக்கு எகிப்து அதிபர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும். அது மட்டுமின்றி குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது. டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் எகிப்து அதிபர் அல் சிசிக்கு திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குடியரசு தினத்தன்று காலை 8.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். நாட்டின் முதல் குடிமகளான ஜனாதிபதி திரௌபதி முர்மு கொடியேற்றுவார். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.பிரதமர் மோடி அமர் ஜவானில் மரியாதை செலுத்துவார். குடியரசு தின அணி வகுப்பு காலை 10.00 மணிக்கு துவங்க உள்ளது.
இந்த விழாவில் சிறந்த சேவைக்கான குடியரசு தலைவரின் காவலர்களுக்கான விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான விருது பெறும் காவலர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏ எஸ் பி. பொன் ராமு, அரியலூர் ஏ எஸ் பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் இந்த சிறந்த சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 21 காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.