தேனி மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக 3000 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் முறிந்து நாசமாகியது.
தேனி மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கன மழையால்,பல்வேறு பகுதிகளில் வாழை மரங்கள் ஒடிந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் பெரும் கவலை யடைந்துள்ளனர். இதில் அடித்த சூறைக் காற்றினால் கம்பம் பகுதில் பயிரிடப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்கள் ஒடிந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கருநாக்க முத்தம் பட்டி, சுருளிப் பட்டி, குள்ளப்ப கவுண்டன் பட்டி, நாராயணத் தேவன் பட்டி, அணைப்பட்டியில் 3000 ஏக்கரில் வாழை விவசாயம் நடக்கிறது. நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் கதிரேசன், பரமன், ஈஸ்வரன், அரசன் ஆகியோரின் நிலங்களில் 8,000 க்கும் மேற்பட்ட விளைந்த வாழை மரங்கள் வாழை தார்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கூடலூர், குள்ளப்ப கவுண்டன் பட்டி, கருநாக்க முத்தன்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்யத் தொடங்கியது. மழை பெய்து கொண்டிருந்த போது சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. இந்த சூறாவளி காற்றில் கருநாக்க முத்தன் பட்டி மயான சாலை பகுதிகளில் உள்ள ஒரு தோட்டத்தில் சாகுபடி செய்திருந்த 3, 500-க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் விழுந்தன. இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டது.