தமிழகத்தில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது என்றும் அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெறுவது தொடர்பாக அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கான பயிற்சி முகாமை சென்னையில் நேற்று தொடங்கி வைத்து சண்முகசுந்தரம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தியாளர்களிடம் பொருள்கள் பெற்று அதற்கு தரம் அளித்து, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக மங்களம், மருதம், அர்த்தணாரீஸ்வரர் போன்ற பெயர்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரபலமான பொருள்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தரமான பொருள்கள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழகத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்கப் பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.