கனடாவில் சீக்கிய மத நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சீக்கிய மக்கள், அந்த நாட்டு பிரதமர் ட்ரூடோ முன்னிலையில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற முழக்கத்துடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் இந்த இயக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்த இயக்கம் ஒடுக்கப்பட்ட போதிலும், வெளி நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் தொடர்ச்சியாக காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில்தான், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த 1699ம் ஆண்டு சீக்கிய மதம் நிறுவப்பட்டது. அந்த நாளை சீக்கிய புத்தாண்டாக ஒவ்வொரு ஆண்டும் சீக்கிய மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் டொரன்ட்டோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆன்டாரியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சில் (ஓஎஸ்ஜிசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கனடாவில் வாழுந்து வரும் சீக்கியர்கள் கலந்துக்கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்துக்கொண்டார். அவர் மக்களிடம் பேசுவதற்காக மேடையை நோக்கிச் செல்லும்போது 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற கோஷம் எழுப்பப்பட்டது. அவர் மேடையில் நின்று பேசத் தொடங்கும் வரை இந்த கோஷம் எழுந்தது.
இந்த நிகழ்ச்சியில் கனடா பிரதமர் பேசுகையில், “கனடாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக பன்முகத்தன்மை விளங்குகிறது. இங்கு வசிக்கும் சீக்கியர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்படும்.” என்று பேசினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பேச எதிர்க்கட்சி தலைவர் பீரே பாய்லீவ்ரே மேடைக்கு செல்லும்போதும் காலிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்களின் கோஷம் எழுந்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கனடா நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் அனுமதிக்கப்பட்டதற்காக அந்நாட்டு துணைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடா இடம் அளிக்கிறது என்பதை இந்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
இதுபோன்ற செயல்பாடுகள் இந்தியா-கனடா இடையிலான உறவை பாதிப்பது மட்டுமல்லாமல், அந்நாட்டு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.” என்று அதில் கூறப்பட்டிருந்தது.