செய்திகள்

காட்டிக் கொடுத்த 'க' - சீர்காழி கோயிலில் கிடைத்த செப்புப்பட்டயங்கள் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாம்!

ஜெ. ராம்கி

சீர்காழியில் உள்ள பழம்பெருமை வாய்ந்த சட்டைநாதர் கோயிலில் அடுத்த மாதம் குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது. யாகசாலை கட்டுவதற்காக களிமண் எடுக்க மேற்கு கோபுர வாயிலின் உட்புறத்தில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது ஏராளமான ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டன. கூடவே நூற்றுக்கணக்கான செப்புப் பட்டயங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

400க்கும் மேற்பட்ட திருமுறைகள் பொறிக்கப்பட்டுள்ள தேவாரச் செப்பேடுகள், தமிழக தொல்லியல் வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. தேவாரத் திருமுறைகள் செப்பேடுகளில் எழுதி வைக்கப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் உண்டு. ஆனால் இப்போதுதான் முதன்முறையாக திருமுறைகள் எழுதப்பட்ட செப்பேடுகள் பெரிய எண்ணிக்கையில் கிடைத்துள்ளதாக வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

சுமார் 4 அடி நீளமும், 1/2 அடி அகலமும் உள்ள செப்பேடுகளில் சம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. திருமுறைகள் பொறிக்கப்பட்டுள்ள செப்புப் பட்டயங்கள் 800 ஆண்டுகளுக்கு முந்தையவை என்கிற முடிவுக்கு வரலாற்று அறிஞர்கள் வந்திருக்கிறார்கள்.

ஓலைச்சுவடிகளில் பிரதி எடுக்கும் பழக்கம் பல தலைமுறைகளாக தொடர்ந்து இருந்து வந்ததால் ஓலைச்சுவடிகளில் திருமுறை எழுதிய சுவடுகள் இன்னும் காணக்கிடைக்கின்றன. ஆனால், கோயில்கள் செப்பேடுகளில் பொறிக்கப்பட்ட தேவாரப் பாடல்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தன.

கல்வெட்டிலும் திருமுறைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கொரடாச்சேரி அருகே திருவிடைவாசல் சிவன் கோயிலில் திருஞானசம்பந்தரின் பதிகம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாளில் கோயில் புனரமைப்பின்போது கல்வெட்டு அழிந்து போனது. கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட பாடல்கள் பெரிய அளவில் நமக்கு கிடைக்கவில்லை. கிடைத்தவையும் பின்னாளில் சிதைக்கப்பட்டுவிட்டன.

சீர்காழியில் கிடைத்துள்ள செப்புப் பட்டயங்கள், குலோத்துங்கச் சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தளபதியாக இரந்த காலிங்கராயன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று முடிவாகியிருக்கிறது. அந்நியர் படையெடுப்புக்கு காலக்கட்டத்தில் பாதுகாப்புக்கு காரணங்களுக்காக புதைக்கப்பட்டிருக்கலாம்.

செப்பேட்டின் இடது ஓரத்தில் தலத்தின் பெயர், பண் பெயர் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளது. அச்சில் உள்ள தேவாரப் பாடல்களுக்கும் செப்பேட்டில் உள்ளவற்றிற்கும் சில வித்தியாசங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

செப்பேடுகளில் உள்ள எழுத்துகளின் வடிவமைப்பை பார்க்கும்போது, இவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரிய வருகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரர் பாடிய தேவாரப் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. செப்பேட்டில் உள்ள க என்னும் எழுத்தை வைத்துப் பார்க்கும்போது 12 ஆம் நூற்றாண்டு என்பது தெளிவாகிறது என்பதை பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

சீர்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை தொல்லியல் துறையினரும், இந்து சமய அறநிலையத்துறையினரும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். வேறு ஏதாவது புதிய தகவல்கள் கிடைக்குமா என்பதுதான் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சைவ சமய அறிஞர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

மன அமைதி தரும் பாத்ரூம் - ஆய்வு கூறும் செய்தி! தவறுதலாக நினைக்க வேண்டாம்...

WhatsApp-ல் திருமண அழைப்பிதழ் வந்தால் தெரியாமல் கூட திறந்துடாதீங்க! 

ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

சோயா பனீர் பிரியாணி செய்யலாம் வாங்க! 

காஃபின் கலந்திருக்கும் காபி தெரியும்; ‘டீகாஃப்’ என்றால் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT