கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும்படி யூனியன் கார்பைடு நிறுவனத்தை கேட்டுக்கொள்ளும் மத்திய அரசின் சீராய்வு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கைவசம் உள்ள 50 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
1984ல் நடைபெற்ற போபால் விஷவாயு விபத்தை யாராலும் மறக்கமுடியாது. அப்படியொரு மோசமான தொழிற்சாலை விபத்தை அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் உலகம் சந்தித்ததில்லை. அரை மணி நேரத்தில் நடந்த விபத்தின் தாக்கம், அரை நூற்றாண்டுகளுக்குத் தொடரும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள், பல தலைமுறைகளாக நுரையீரல் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
போபால் விபத்து நடந்து அடுத்து வந்த பத்தாண்டுகளுக்குப் போபால் நகரத்தின் தெற்குப் பகுதியால் மீண்டு வரமுடியவில்லை. மருந்தகங்களில் மக்கள் கூட்டம் வரிசையில் நின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் இன்றுவரை இருமிக்கொண்டிருந்தார்கள். மனிதர்கள் மட்டுமல்ல ஆடு, மாடு நாய், பன்றி, ஏன் மரங்கள் கூடப் பட்டுப்போயின.
போபால் விபத்து சம்பந்தப்பட்ட வழக்கை எங்கே நடத்துவது என்பதில் சர்ச்சை எழுந்தது. அமெரிக்காவிற்கு பதிலாக இந்தியாவிலேயே வழக்கை நடத்தமுடியும் என்று யூனியன் கார்பைடு நிறுவனம் சார்பில் ஆஜரான நானி பல்கிவாலாவின் வாதம் ஜெயித்தது. இந்திய தண்டனைச் சட்டம் 304 பிரிவின் கீழ் ஒரு சாதாரண விபத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பமானது.
மூவாயிரம் பேர் பலியானதாக கணக்கிடப்பட்டு 470 மில்லியன் டாலர் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் 1989 மே, 4 அன்று இந்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்ததாலும், பக்க விளைவுகள் அதிகமாக இருந்ததாலும் கூடுதல் இழப்பீட்டு தொகை பெறுவதற்கான முயற்சிகளில் மத்திய, மாநில அரசுகள் முயற்சியெடுத்தன.
2010ல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5295 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தது. 1989ல் உச்சநீதிமன்றம் அறிவித்த இழப்பீட்டுத் தொகையாக 470 மில்லியன் டாலர் அதாவது 725 கோடி ரூபாய் யூனியன் கார்பைடு நிறுவனம் தரவேண்டும் என்று ஏற்கனவே தந்த தீர்ப்புதான், இறுதித் தீர்ப்பு என்று உறுதிப்படுத்தியிருக்கிறது.
இழப்பீட்டுத் தொகையை பெறுவதற்கான முயற்சிகளை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்க வழிசெய்யாமல் அரசுகள் அலட்சியம் செய்திருக்கின்றன
ஏற்கனவே கொடுத்த இழப்பீட்டுத் தொகை முழுவதும் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சேரவில்லை. ஏறக்குறைய 50 கோடி ரூபாய் ரிசவர் வங்கியின் இருப்பில் இருக்கிறது. அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யூனியன் கார்பைடு நிறுவனமோ, மத்தியப் பிரதேசத்தின் மாநில அரசோ சம்பந்தப்பட்ட யூனிட்டை நிரந்தர மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பலியானவர்களின் உண்மையான எண்ணிக்கையை இதுவரை யாராலும் உறுதிப்படுத்தமுடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமாக இருந்த யூனியன் கார்பைடு, உலகின் முதல் அணுகுண்டை தயாரித்த நிறுவனம். உலகம் முழுவதும் யூனியன் கார்பைடு தடம் பதிக்காத துறைகள் இல்லை. பெட்ரோ கெமிக்கல்ஸ், பிளாஸ்டிக், இயற்கை எரிவாயு, கார்பன் உற்பத்தி எனப் பல துறைகளில் முன்னணி நிறுவனமாக இருந்திருக்கிறது, தற்போது டொவ் கெமிக்கல்ஸ் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.