செய்திகள்

பிறந்த நாள் இறந்த நாளான சோகம்!

சேலம் சுபா

சாலை விதிகளை கடைபிடிக்காமல் அசுர வேகத்தில் வாகனத்தை ஒட்டி விபத்தில் உயிரிழக்கும் இளைஞர்கள் அதிகமாகி விட்ட நிலையில் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான  கட்டுப்பாடுகள் தேவை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

      தமிழகத்தில் அசுரவேகத்தில் வாகனங்களை ஓட்டும் இளைஞர்கள்  விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்  20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்கி வருகிறது. பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மக்கள் சுலபமாக பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 1994 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தங்க நாற்கர சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.

       இத்திட்டத்தில் முதல் கட்டமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் அதனை தொடர்ந்து மாநிலங்களில் முக்கியசாலைகள் என போக்குவரத்துக்கு ஏதுவாக நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வாகன ஓட்டிகள் அதி வேகமாக செல்கின்றனர். மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் நிகழ்கிறது.

      சமீப காலமாக நான்கு வழி சாலைகள் மட்டும் இன்றி மாநில சாலைகளிலும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிறந்த நாளை கொண்டாடிய மூன்று பேர் ஒரே பைக்கில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது அசுர வேகததில் சென்ற பைக் சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் சென்ற கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 20ஆம் தேதி வாலிபர் ஒருவர் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி விட்டு பைக்கில் வீட்டிற்கு வேகமாக வந்தபோது வலசையூர் அருகே நிலை தடுமாறிகீழே விழுந்ததில் அடிபட்டு  உயிரிழந்தார். இது போன்ற  செய்திகளை இப்போது அதிகம் காண்கிறோம்.

    சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காததும், அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதுமே விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது என்கின்றனர் போக்குவரத்து அதிகாரிகள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் லாரி கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக பட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதே அதிவேகம் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றோ அனைவருமே ஆபத்தை அறியாமல்  100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்கின்றனர். வெளிநாடுகளில் பைபாஸ் சாலைகளின் குறுக்கே எந்த கால்நடைகளும் வராது என்பதால் அங்கு அதிவேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் நம் நாட்டில் பைபாஸ் சாலைகளில்  திடீரென வாகன ஓட்டிகளும் ஆடு மாடு போன்ற கால்நடைகளும்  குறுக்கே வருவது சகஜம். இதைக் கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக போகும் வாகன ஓட்டிகளால்தான்  30 சதவீதம் விபத்துக்கள் நிகழ்கின்றது.

      பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வாலிபர்கள் விபத்துகளில் சிக்குவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மகிழ்ந்து விட்டு  போதையில் வாகனத்தை ஓட்டும் வாலிபர் விபத்தினால் உயிரிழக்கும் போது ஒட்டுமொத்த குடும்பமும் வேதனையில் பாதிக்கிறது. விபத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப் பட்டு காலமெல்லாம் வாடுவோரும் உண்டு.

    இதுபோன்ற துயரங்களை நினைவில் கொண்டு முறையாக சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில்தான் வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் .அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT