செய்திகள்

பாஜகவால் என் நிழலைக்கூட நெருங்க முடியாது - சசிகலா

கல்கி டெஸ்க்

அதிமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தொண்டர்களின் நிலைபாடு என்ன? அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களின் குமுறலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இரட்டை இல்லை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது. முடக்கவும் முடியாது. பொதுச் செயலாளர் பதவியை அளிக்கக் கூடிய இடத்தில் தொண்டர்கள்தான் உள்ளனர். வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும்  என கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சசிகலா பேசினார்.

திவாகரனுக்குச் சொந்தமான கல்லூரி ஒன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டையில் இருக்கிறது.

திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கல்லூரி நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். இக்கல்லூரியில் ‘கல்லூரி நிறுவனர் நாள்' விழா நேற்று (24.01.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சசிகலாவுக்கு ஆளுயுர மாலை அணிவித்ததுடன், திவாகரனும் ஜெய் ஆனந்தும் சேர்ந்து நினைவுப்பரிசும் வழங்கினர்.

 அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், ``சசிகலாவை கல்லூரி விழாவுக்கு அழைத்து வர வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது இப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது. எங்களுடன் பிறந்தவர்கள் இப்போது யாரும் இல்லை. நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம். எங்கள் தாயின் நினைவுநாளில் சசிகலா கல்லூரிக்கு வந்திருக்கிறார். என்னை சிறு வயதில் தாயாக இருந்து கவனித்துக்கொண்டவர். அவரை எங்கள் கல்லூரியில் படிக்கும் பாசமலர்களான மாணவிகளுக்கு, அழைத்து வந்து காட்ட வேண்டும் என நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது'' என்றார்.

அதன் பின்னர் சசிகலாவிடம் மாணவிகள் ஒவ்வொருவராக, கேள்விகளை எழுப்பினர்.

`கஷ்ட காலங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?', `ஜெயலலிதாவுடன் இருந்த அனுபவம்...' எனப் பல கேள்விகளை கேட்டனர்.

அவற்றுக்கு எல்லாம் சசிகலா பதிலளித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, அ.தி.மு.க-வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க நிச்சயம் ஒன்றிணையும். .

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் வீட்டிலிருந்தபடியே மீடியாக்களின் மூலமாக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நல்ல முடிவு எடுங்கள் என கட்சிக்காரர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். இடைத்தேர்தல் வெற்றி என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

தி.மு.க-வினர் தேர்தல் பிரசாரத்துக்கு முன்பு பெட்டி வைத்து குறைகளைக் கேட்டனர். ஆட்சிக்கு வந்ததும் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்றனர். ஆனால், அந்தப் பெட்டியின் சாவி தற்போது தொலைந்துபோய்விட்டது என நான் நினைக்கிறேன். இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அ.தி.மு.க சிதறுண்டு கிடப்பதற்கு பா.ஜ.க-தான் காரணம் என்பதெல்லாம் பொய் குற்றச்சாட்டு. அதற்கு அவசியமே இல்லை. நாம் சரியாக இருந்தால், கட்டுக்கோப்பாக இருந்தால் நம்மை யாரும், எதுவும் செய்ய முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? நம்மை அவர்கள் கட்டுப்படுத்த.

யாரலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பாஜகவால் என் நிழலைக் கூட நெருங்க முடியாது. ஒருவரையொருவர் திட்டுவதை நிறுத்திவிட்டு, ஒன்றிணைந்து தீயசக்தியான தி.மு.க-வை வீழ்த்துவதற்கு கைகோக்க வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள் மட்டுமல்ல, தொண்டர்களுடைய வேண்டுகோளும்கூட'' என்றார் சசிகலா.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT