பிளஸ்2 பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. பி.என்.ஒய்.எஸ். பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளான யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில், 2024-2025 ஆம் ஆண்டுக்கான பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இதில் அரசு மற்றும் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பட்டப்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கப்படும். விருப்பமுள்ள தகுதியான மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப படிவம் மற்றும் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இயக்குநரக அலுவலகம் அல்லது தேர்வுக்குழு அலுவலகம் அல்லது வேறு எந்த ஆயுஷ் முறை மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட மாட்டாது.
மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம், பிற கட்டண விவரங்கள், கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற தகவல்கள் தொகுப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்புக்கான விவரங்கள்:
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பி.என்.ஒய்.எஸ் பட்டப்படிப்புக்கான காலம் 51/5 ஆண்டுகள் ஆகும்.
கல்வித்தகுதி: பிளஸ்2
இட ஒதுக்கீடு: அரசுக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மட்டுமே சேர்க்கை நடைபெறும். சுயநிதிக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை 600 106.
கடைசி தேதி:
விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்ய நீட்டிக்கப்பட்டுள்ள கடைசி தேதி 22-07-2024 மாலை 5:00 மணி வரை.
விண்ணப்ப படிவத்தை தபால் அல்லது கூரியர் வாயிலாக சமர்ப்பிக்க நீட்டிக்கப்பட்டுள்ள கடைசி தேதி 22-07-2024 மாலை 05:30 மணி வரை.
குறிப்பு: மேலும் விவரங்களுக்கு தகவல் தொகுப்பேட்டை நன்றாகப் படித்து பார்த்துக் கொள்ளவும்.
இயற்கை மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.