மும்பை – சென்னை விமானத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அவசர அவசரமாக விமானம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து மெயில் மூலம் வந்தது. இதனால், மக்கள் பிதியடைந்தனர்.
அதேபோல் கடந்த ஜூன் 3ம் தேதி டெல்லி-மும்பை ஆகாசா ஏர் விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதன்பிறகு பாதுகாப்பிற்காக அந்த விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதேபோல், கடந்த ஜூன் 2ம் தேதி பாரிஸ்-மும்பை வழித்தடத்தில் இயங்கும் விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டு, விமானம் முழுவதும் முழு சோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூன் 1ம் தேதி சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அப்போது அந்த விமானத்தில் 172 பயணிகள் இருந்தனர். மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்தவகையில் நேற்று இரவு நாட்டின் 41 விமான நிலையங்களுக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. எல்லா மெயில்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மெசேஜ்தான் வந்தது. அந்த செய்தியில், "ஹலோ, விமான நிலையத்தில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. விரைவில் வெடிகுண்டுகள் வெடிக்கும். நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள்." என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தவகையில் சென்னை - மும்பை இண்டிகோ விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், விமானம் மும்பையில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த 6E 5149 என்ற இண்டிகோ விமானத்தில் 196 பயணிகளும் 7 பணியாளர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் முழுமையாக சோதனை செய்து பார்த்தனர். அதன்பிறகு அந்த செய்தி புரளி என்பதை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.