கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்தை தினசரி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமான நிலையத்திலிருந்து சார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அதோடு சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பிற நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்பநாய் மூலம் விமான நிலையத்தை சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய வளாகத்தில் பாதுகாப்பு கொடுத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலீசார் இந்த விசாணையில் வழக்குப்பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்று தேடி வருகின்றனர். நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக இது போன்ற மிரட்டல் வந்துள்ள நிலையில் தற்போது கோவை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் வந்துள்ளது .
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக, பள்ளிகள், மருத்துவமனைகள் என இது போன்ற மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.