செய்திகள்

பம்பாய் சகோதரி லலிதா மறைவு!

கல்கி டெஸ்க்

பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்களை இசை உலகம், ‘பம்பாய் சகோதரிகள்’ என பெருமையுடன் அழைத்து வந்தது. இந்த இசை சகோதரிகளில் ஒருவரான லலிதா சந்திரன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. இவர்கள் இருவரும் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த என்.சிதம்பரம் ஐயர்-முக்தாம்பாள் ஆகியோரின் மகள்களாவர்.

தங்கள் இளைய வயதில் பம்பாயில் மாட்டுங்காவில் பள்ளிக் கல்வியை இவர்கள் இருவரும் பயின்றனர். பிறகு தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தனர். இவர்கள் இருவருக்கும் ஹெச்.ஏ.எஸ்.மணி, முசிறி சுப்பிரமணிய ஐயர், டி.கே.கோவிந்த ராவ் ஆகியோர் குருவாக இருந்து கர்நாடக இசையைப் பயிற்றுவித்தனர்.

பட்டப் படிப்பையும் இசைப் பயிற்சியையும் முடித்த இவர்கள் இருவரும், தலைநகர் சென்னையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தி இசை பிரியர்களின் நன்மதிப்பையும் கவனத்தையும் ஈர்த்தனர். தங்களது கணீரென்ற இசை குரல் வளத்தால் இவர்களை, ‘பம்பாய் சகோதரிகள்’ என்றே அனைவரும் அன்போடு அழைத்து மகிழ்ந்தனர்.

1963ம் ஆண்டு இசைக் கச்சேரிகள் நடத்த ஆரம்பித்த இவ்விருவரும் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு இந்திய மொழிகளில் பாடி இசை ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து வந்தனர்.

இந்த இசை சகோதரிகளின் கலைப்பணியைப் பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும், தமிழக அரசு கலைமாமணி விருதையும், சென்னை, மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருதையும் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் உடல் நலிவுற்று இருந்த லலிதா சந்திரன் நேற்று சென்னையில் இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னை அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த இசைக் கலைஞர் லலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று பிற்பகல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது. இவரது கணவர் என்.ஆர்.சந்திரன் சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமாவார்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT