ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக் கிடமாக உள்ளது.
பேருந்தில் மொத்தம் 75 பேர் சென்று கொண்டிருந்த நிலையில் இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல்துறை மற்றும் மத்தியப் படைகளைத் தவிர, உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு, அமிர்தசரஸில் இருந்து பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து ஒன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஜம்மு-ஸ்ரீநகர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் இந்த விபத்து குறித்து கூறுகையில், இந்த விபத்து குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், பேருந்தை ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததும் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் பெறும் பரபரப்பினையும், சோகத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.