ஜம்மு காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகான முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.
முதல்கட்டமாக பாம்போர், டிரால், புல்வாமா, ராஜ்போரா, சோபியான், குல்காம், அனந்த்நாக், பஹல்காம், கிஷ்த்வாா், தோடா உள்ளிட்ட 24 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் உள்ளன.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகையால், அங்கு பாதுகாப்புகளும் வலுபடுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தேர்தல் பணிக்காக எல்லைப் பாதுகாப்பு படையினர், பட்காம் மாவட்டம் பிரெல் வாட்டர்ஹெயில் பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தப் பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்தனர். அப்போது பேருந்து ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து புத்காம் மாவட்டத்தில் உள்ள வட்டர்ஹாலின் ப்ரெல் அருகே உள்ள 40 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து உள்ளூர் வாசிகள் பேருந்தின் உள் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. மேலும் 32 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தேர்தல் பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் படை வீரர்கள் உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.