செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு பைபாஸ் ஆபரேஷன் நடக்க உள்ளது. உடல்நிலைக் குறைபாடு காரணமாக காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, செந்தில் பாலாஜியின் இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அறுவை சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி காவிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இரண்டு முதல் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெறுவதாக கூறப்படுகிறது. முன்னதாக அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தனர்.
அமலாக்கத்துறையின் காவல் முடிய 3 நாட்கள் உள்ளநிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார் என கூறப்படுகிறது. இதனிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.