தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் முடிந்துவிட்டன. புதிய கல்வியாண்டுக்கான பணிகளையும் சில இடங்களில் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்னர் வகுப்புகளை தொடங்கக்கூடாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதியும் நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டுக்கான பணிகள் ஏப்ரல் இறுதி வரை நடைபெற இருக்கின்றன. இம்முறை கோடைக்காலம் கடுமையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் இருந்தாலும ஏப்ரல் மாதம் முழுவதும் பள்ளிகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.
ஆனால், சி.பி.எஸ்.இ முறையை பின்பற்றும் பல பள்ளிகளில் ஏற்கனவே கல்வியாண்டு நிறைவு பெற்றிருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான கல்வியாண்டுக்கான அனைத்து தேர்வுகளும் முடிவடைந்து, தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டன.
அடுத்த நிதியாண்டுக்கான பணிகளையும் சில பள்ளிகள் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தன. புதிய வகுப்புகளை அடுத்த வாரம் தொடங்குவதற்கும் முன்னதாக புதிய கல்வியாண்டுக்கான புத்தகங்களை விநியோகிக்கவும், கல்விக்க கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தும்படியும் கேட்டுகொண்டிருந்தன. மார்ச் மாத இறுதியில் புதிய வகுப்புகளை தொடங்கும் வழக்கம், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராக் திரிபாதி, புதிய உத்தரவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியிருக்கிறார். புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளை சில பள்ளிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது விதிமுறைகளுக்கு மாறானது. குறிப்பிட்ட கால வரையறைக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்திட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் அதிக சுமை மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித் திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற கல்வியாண்டின் பாடம் சாராத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும். கல்வியாண்டு தொடங்கியபின்னர் அதற்கு போதிய நேரம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுவிடும்.
பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும். எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிர்க்கவேண்டும். வழக்கம் போல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-இல் நிறைவு செய்யவேண்டும் என்று அறிக்கையின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார். நல்ல விஷயம்தான்!