பிறந்தா பணக்கார வீட்டு நாயாப் பொறக்கணும் என்ற வார்த்தைகளை கேட்டிருப்போம். உறவுகளுக்கு தராத பாசத்தை தங்கள் செல்லப்பிராணிகள் மீது வைப்பவர்கள் அநேகர். நாய்களுக்கு நீண்ட ஆயுள் என்பது இல்லை என்பதை அனைவரும் அறிவோம். ஒரு சாதாரண நாயின் ஆயுட்காலம் சராசரியாக பத்து அல்லது பதினொன்று என்றும் கலப்பின நாய்களின் ஆயுள் இன்னும் ஓரிரு ஆண்டுகள் கூடும் என்றும் நாய்களைப் பற்றிய சர்வே கூறுகிறது. இந்நிலையில் ஒரு நாய் தனது 31 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது என்றால் அது உலக அதிசயம்தானே?
போர்ச்சுக்கல் நாட்டின் உலகின் மிக வயதான நாய் தனது 31 வது பிறந்த நாளைக் கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்ததுள்ளது. போர்ச்சுகீசிய நாட்டில் உள்ள ரஃபேரியோ டோ அலெண்டிஜோ (Raferiyo Do Alentejo) என்ற இனத்தைச் சேர்ந்த போபி என்ற பெயர் கொண்ட நாய் உலகிலேயே மிகவும் வயதான நாயாக கண்டறியப் பட்டுள்ளது.
போர்ச்சுகீசிய கிராமமான கான்குயூரோசில் உள்ள லியோனல் கோஸ்டா என்பவர் இந்த நாய்க்கு உரிமையாளர். லியோனல் ஏற்கனேவே பல நாய்களை வளர்த்து வந்தார். போகிரா எனும் நாய் 18 வயது வரை வாழ்ந்தது. ஆனால் போபியோ 31 வயதை எட்டி ஆச்சர்யப்படுத்துகிறது. 1992ல் போபியை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்களால் அதன் பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்த நாய்க்கு கடந்த சனிக்கிழமை 31 வது பிறந்தநாள் பிறந்தது. இதை முன்னிட்டு இதன் உரிமையாளர் பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்தார். போர்ச்சுகீசிய பாரம்பரிய முறைப்படி நடந்த இந்த விழாவில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் உள்ளூர் விருந்தினர்களுக்கு இறைச்சிகள் மற்றும் மீன்கள் உணவாக வழங்கப்பட்டது. மனிதர்கள் சாப்பிடும் உணவை மட்டும் உண்ணும் போபிக்கும் இந்த விழாவில் கூடுதல் ருசியான உணவு வழங்கப்பட்டது. மேலும் போபியை மகிழ்விக்க நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் போபியும் பங்கேற்று நடனம் ஆடி மகிழ்ந்தது. இதன் மூலம் உலகின் வயதான நாய் என்ற பெயருடன் கின்னசில் இடம் பெற்றுள்ளது.
போபியின் ஆயுள் ரகசியம் என்னவென்று தெரிந்தால் நம் வீட்டு செல்லப் பிராணிகளையும் நீண்ட நாள் கொஞ்சி மகிழலாம். ஆனால் போபி வாயில்லா ஜீவனாயிற்றே... எந்த உயிராக இருந்தாலும் அன்புடன் அவற்றை பராமரித்தால் அவைகள் நீண்ட ஆயுளைப் பெறலாம்.