இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துபோது கூடவே சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டுமென்றும், அரசுத்துறைகளில் மட்டுமல்லாது தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென்றும் தி.மு.க கோரிக்கை வைத்திருக்கிறது. இரண்டு நாட்கள் முன்னர் நடந்த அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அளவில் நடத்துவதில் ஆர்வம் காட்டியது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மாநில அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கியது போல் தமிழ்நாடு அரசும் தனியாக பட்ஜெட் ஒதுக்கி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தி.மு.க அரசு பின்வாங்கியிருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது கூடவே சாதி வாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவேண்டும் என்று தி.மு.க கோரிக்கை விடுத்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணுவதில் மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களை மத்திய அரசு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகிறது என்று எதிர்க் கட்சியாக இருநதபோது தி.மு.க தலைவர்கள் பேசியிருக்கிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கைக்கு இதுவரை மத்திய அரசு பதிலளிக்கவில்லை. மாநில அளவில் செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். ஆனால், மத்திய அரசு மேற்கொள்ளும் சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அளவில் கண்காணிக்க ஒரு குழுவை அமைப்போம். அதன் மூலம் வேலைவாய்ப்பு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சரியாக செயல்படுகிறதா என்பதைக் கண்காணித்து மத்திய அரசுக்கு தெரிவிப்போம் என்று தி.மு.க முடிவு செய்திருக்கிறது.
சமூக ரீதியின் பெயரால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க தி.மு.க முயற்சி செய்வதாக டெல்லி வட்டாரங்களில் செய்திகள் அடிபடுகின்றன. பெரும்பாலான மாநிலக்கட்சிகள் தங்களது மாநிலங்களில் இட ஒதுக்கீடு குறித்த விஷயங்களை முன்னிலைப்படுத்தும் நிலையில் சமூக நீதிக்கு ஆதரவான அமைப்பாக ஒரு புதிய அணி உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டவர்கள் புதிய அணிக்கு தயராக இருப்பார்கள். நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டவர்கள் அணியில் சேருவதற்கு தயக்கம் காட்டலாம். ஒருவேளை அணி சேர்ந்தால், சந்திரபாபு உள்ளிட்டவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.
இந்நிலையில் பா.ஜ.க கட்சியின் நிறுவனர் நாளையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பாஜக விரும்புவதில்லை. உண்மையான சமூகநீதியே எங்களுக்கு முக்கியம். எதிர்கட்சிகள் சமூகநீதியை காப்பதுபோல் நாடகம் ஆடுகின்றன என்று பேசியிருக்கிறார். எது எப்படியோ, சமூக நீதி என்னும் பெயரில் ஜாதிக் கணக்குகளை மனதில் வைத்து ஒரு அரசியல் ஆட்டம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.