சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போர்ட்போலியோ வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோர்களுக்கு எதிரான தாமாக முன்வந்துவழக்குப்பதிவு செய்திருந்தார். ஆனால், இவர்கள் மீதான வழக்குகளை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்ததை எதிர்த்து அவர் வழக்குகளை பதிவுச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குகளை பதிவுச் செய்வதால், தன்னை வில்லன் போல் பார்க்கிறார்கள் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா நீதிபதிகளுக்கான போர்ட்போலியோவை 3 மாதத்துக்கு ஒருமுறை மாற்றும் வழக்கத்தின் அடிப்படையில், அக்டோபர் 3-ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பட்டியல் வெளியிட்டார்.
அதன்படி முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரித்துவந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், மதுரை கிளையில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் 11 நீதிபதிகளில் ஆனந்த் வெங்கடேசும் ஒருவர். இவர், அங்கு வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை பணியாற்ற உள்ளார்.
இதனையடுத்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் கவனிப்பார் என கூறப்பட்டுள்ளது.