சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 112 இடங்களில் தயார் நிலையில் மின் மோட்டார்கள் பொருத்தப் பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மூலம் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு மாத கால பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை ஆணையர் சினேகா,அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது;
சென்னை மாநகராட்சி பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை பொறுத்தவரையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 95% பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. மீதமுள்ள பணிகளும் இம்மாதம் 15-ம் தேதிக்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சென்னையில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கையாக 112 இடங்களில் மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மண்டல வாரியாக வெள்ளம் ஏற்பட்டால் பொது மக்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பத்தாயிரம் நபர்களுக்கு உணவு வழங்கும் வகையில் உணவு கூடம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
-இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்தார்.