கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஆலயமான நடராஜர் ஆலயத்தில் ஆணி திருமஞ்சனம் வெகு விமர்சையாக கடந்த ஜூன் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இன்று ஜூன் 25 அன்று காலை முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை ஜூலை 26 அன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.
சைவ சமயாச்சாரியர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் போற்றப் பெற்றதும், ஐம்பூதங்களில் ஆகாய தலமாக விளங்குவதும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும். இந்த கோவிலை தரிசித்தால் முக்தியளிக்கும்" தலமாக விளங்குகிறது.
திருவிழாவுக்கு பெயர்போன திருமஞ்சன, திருவாதிரை
பிரசித்திப்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 2 திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஒன்று ஆனித்திருமஞ்சன தரிசன திருவிழா, மற்றொன்று மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசன திருவிழா ஆகிய இரு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த திருவிழாக்கள் கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை, மாலை இருவேளையும் பஞ்சமூர்த்தி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும். 9-ம் நாள் தேர்திருவிழாவும், 10 நாள் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், தரிசனமும் நடைபெறும்.
திருவிழாக்களில் முக்கியமானது என்னவென்றால் சித்சபையில் வீற்றிருக்கும் சிவகாமசுந்தரி அம்பாளும், நடராஜமூர்த்தியும் தேர்த்திருவிழாவின் போது கோவிலில் இருந்து வெளியே வருகின்றனர். 2 திருவிழாவின் போதும் தேரில் வீதிஉலா வந்த பின்னர் ராஜ்யசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு மகாபிஷேகமும், லட்சார்ச்சனையும், திருவாரண அலங்கார காட்சியும் நடைபெறும்.
பின்னர் தரிசனத்தன்று ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி அம்பாளும், நடராஜமூர்த்தியும் நடனமாடி பக்தர்களுக்கு தரிசன காட்சியளித்து மீண்டும் சித்சபையில் எழுந்தருளுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது திருவிழா முதல்நாள் முதல் 10-ம் நாள் வரை மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபையில் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறும்.
வருடத்திற்கு 6 மகாபிஷேகம்
ஸ்ரீநடராஜர் கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை புரட்டாசி மகாபிஷேகம் நடைபெறுவது தொன்று தொட்டு வரும் வழக்கமாகும்.ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் முகப்பில் மண்டபத்தின் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
தீர்த்தங்கள்:
இத்தலத்தில் கோவிலில் சிவகங்கை தீர்த்தமும், நடராஜர் சிவசக்தி வடிவமாக கருதப்படும் கிணறும் உள்ளது. உடற்பிணியால் வருந்திய சிங்கவர்மன் என்ற வேந்தன் இச்சிவகங்கை குளத்தில் நீராடியதால் உடற்பிணி நீங்கி பொன்னிறம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவை அல்லாமல் மற்றைய தீர்த்தங்களான வியாக்பாரதர் தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகசேரி தீர்த்தம், புலிமேடு தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தம், ஓமக்குளம் தீர்த்தம், ஞானப்பிரகாச தீர்த்தம், ஆயிக்குளம் தீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ளன.
ஆடற்கலை சிற்பங்கள்:
சுமார் 51 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலின் 4 கோபுரங்களும் 4 ராஜகோபுரங்களாக அமைந்துள்ளது. கிழக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்கள் 135 அடி உயரம் கொண்டவை, வடக்கு கோபுரம் மட்டும் 140 அடி உயரம் கொண்டவை. இக்கோவிலில் நெடுங்காலமாக போற்றப்படும் ஆடல்கலை சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. சிவபெருமான் ஆடிய 108 கரணங்களும், சுலோகங்களும் மேலகோபுரத்தில் உள்வாயிலில் அழகாக பொறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தெற்கு, வடக்கு, கிழக்கு கோபுரங்களிலும் இக்கரணங்களின் செயல்முறைகள் சிற்ப அமைப்பில் உள்ளது.