முதுமலை புலிகள் சரணாலயத்தில் குட்டி யானைகளைப் பராமரிக்கும் பாகனான பொம்மன் - பெள்ளி தம்பதியினரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆவணப்படம், ’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்.’ இந்தப் படத்தை இயக்கி இருந்தார் ஊட்டியைச் சேர்ந்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.
சிறந்த சினிமா படங்களுக்காக சமீபத்தில் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளுக்குரிய படங்களில், சிறந்த ஆவணப்படம் விருதுக்காக இந்த ஆவணப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற இந்தப் பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கார்த்திகிக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையையும் வழங்கி கௌரவித்தார்! அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகி, ‘தமிழ்நாட்டுக்காக ஆஸ்கர் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் ஒரு பெண்ணாக இருந்து இந்த ஆஸ்கர் விருதைப் பெற்றது பெருமையாக இருக்கிறது” எனவும் அவர் கூறினார்.