முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாட்கள் பயணமாக வெளிநாடுகள் செல்ல இருக்கிறார் .அவரின் பயணத்திட்டம் என்ன தெரியுமா ?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 23 ஆம் தேதி முதல் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையில் 24ம் வருடம் ஜன 10, 11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு செல்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது.
சிங்கப்பூரில் வருகிற மே 24 ஆம் தேதி நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், சிங்கப்பூர் – இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 350 வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த பயணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சிங்கப்பூரின் வர்த்தக உறவுகளுக்கான அமைச்சர் எஸ். ஈஸ்வரன், SICCI நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு அரசு – சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழல் குறித்த களத் தகவல்களைப் பெற ஆர்வமுள்ள சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு அங்கு நடைபெறும் மாநாடு துணைபுரியும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி ஜப்பான் செல்லும் முதலமைச்சர் 31 ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒசாகா, டோக்கியோ நகரங்களில் ஜப்பானிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இருக்கிறார்
ஜப்பான் பயணத்தில் வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பாக நடைபெறும் நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின்போது அரசு அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டங்களையும் மு.க.ஸ்டாலின் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.