செய்திகள்

மத்தியப் பிரதேச தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் காங்கிரஸின் ஐந்து வாக்குறுதி பார்முலா!

கல்கி டெஸ்க்

த்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி இப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது. நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களுக்குக் கொடுத்த ஐந்து வாக்குறுதிகளைப் போலவே மத்தியப் பிரதேச வாக்காளர்களுக்கும் ஐந்து வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது

அந்த வாக்குறுதியின்படி, எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாயாகக் குறைக்கப்படும், பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 1500 ரூபாய் கொடுக்கப்படும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகிய ஐந்து வாக்குறுதிகளை மத்தியப் பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுத்து இருக்கிறது. ‘கர்நாடக மாநிலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றினோமோ அதேபோல், மத்தியப் பிரதேச மாநிலத்திலும் நிறைவேற்றுவோம்’ என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 12ம் தேதி பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நர்மதா நதிக்கரையில் பூஜை செய்து தனது பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், பின்னர் ஜபல்பூர் பேரணியில் பங்கேற்க இருக்கிறார். இதனிடையே, இந்தத் தேர்தலை மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்றும், அவர்தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்றும் அம்மாநில மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 20க்கும் அதிகமானோர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியதை அடுத்து, கடந்த 2020 மார்ச் முதல் இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

SCROLL FOR NEXT