ஊழல் செய்ய வசதியாகவே எதிர்க்கட்சிகள் ராகுல்காந்தியை பிரதமராக வேண்டும் என்று விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க. கடந்த இரண்டு நாள்களாக அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ராஜஸ்தானில் முகாமிட்டு பல்வேறு பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெய்ப்பூர், உதய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராகுல்காந்தியை பிரதமராக்கும் நோக்கிலேயே 21 கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன. அவர்களின் முக்கிய நோக்கம் ராகுல் காந்தி பிரதமராகிவிட்டால் ஊழல் செய்வது எளிதாகிவிடும் என்று நினைக்கின்றனர்.மேலும் அவர்கள் வாரிசுகளுக்காக பதவி தேடி அலைகின்றனர்.
சோனியாகாந்தி, ராகுல் காந்தியை பிரதமராக்க நினைக்கிறார். லாலு பிரசாத் மகன் தேஜஸ்வியை பிகார் முதல்வராக்க நினைக்கிறார். மம்தா பானர்ஜி, தமது உறவினர் அபிஷேக்கை தனக்குப் பிறகு முதல்வராக்க முயற்சிக்கிறார். ராஜஸ்தானில் அசோக் கெலோட் தமது மகன் வைபவை முதல்வராக்க துடிக்கிறார் என்றார். ராகுல்காந்தி பிரதமராகிவிட்டால் நாட்டில் ஊழலும் முறைகேடுகளும் பெருகிவிடும். ஆனால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலோட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலின் பிறப்பிடமாக மாறிவிட்டது. வரும் தேர்தலில் மக்கள் காங்கிரஸை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும். ராஜஸ்தானில் கன்னையாலால் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. மாநில அரசு உரிய நேரத்தில் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தி விசாரணை நடத்தி இருந்தால் இந்நேரம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கிடைத்திருக்கும். ஆனால், கெலோட் அரசு அதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
ராஜஸ்தானில் இந்துக்கள் திருவிழா நடத்தப்படாமல் நிறுத்தப்படுகிறது. ஆனால், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட ஆஃப் இந்தியா அமைப்பின் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அசோக் கெலோட் வாக்கு வங்கிகாக அரசியல் நடத்தி வருகிறார். கடந்த 9 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை அவர் மக்களிடம் விவரித்தார். இந்த 9 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறியிருப்பதாக அவர் கூறினார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி மலரும் என்றும் மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியமைப்பார். வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சம் 300 இடங்களில் வெல்வது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் சதீஷ் பூனியா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.