கள்ளக்குறிச்சியில் விஷக் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் குணமடைந்து வீடு திரும்பிய சிலர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை சிகிச்சை பலனின்றி, பலி எண்ணிக்கை கூடி வருகிறது. இன்னும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், இன்று தளபதி விஜய், அவரது பிறந்தநாளைக் கூட கொண்டாட வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக தற்போது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அந்தவகையில், நாளை பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தது குறிப்பித்தக்கது.
அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் தாய் தந்தையர் என இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் படிப்பு செலவை 18 வயது வரை அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
தனிப்படை அமைத்து இதுத்தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில், மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “விஷச்சாராயம் குடித்துவிட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த சிலர், வீட்டுக்குச் சென்று மீண்டும் வீட்டில் மீதம் இருந்த விஷச்சாராயத்தை குடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விஷச்சாராயம் குடித்து 52 பேர் உயிரிழந்த நிலையில், விழிப்புணர்வின்மை காரணமாக மீண்டும் அவர்கள் அதையே குடிக்கின்றனர்.” என்று அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.