நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த நாடே மணிப்பூர் மக்களுக்கு துணைநிற்கிறது. மணிப்பூரில் அமைதி திரும்பி வருகிறது” என்று கூறினார்.
மணிப்பூரில் வன்முறை நீடிக்கின்றபோதிலும் பிரதமர் மோடி அதுபற்றி வாய் திறக்காமல் இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி மணிப்பூரை குறிப்பிட்டு பேசினார். அவர் தனது உரையில்...
“வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை தலைதூக்கி இருந்தது. அதில் மக்கள் பலர் உயிரிழந்தனர். தாய்மார்களும், மகளிரும் அவமானப்படுத்தப்பட்டனர். ஆனால், அங்கு இப்போது அமைதி திரும்பி வருகிறது. இந்திய மக்கள் மணிப்பூருக்கு துணை நிற்கிறார்கள். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
கடந்த சில நாட்களாக அங்கு அமைதி திரும்பி வருகிறது. அவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழிகாணப்படும். மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். வளர்ச்சி உறுதி செய்யப்படும்” என்றார்.
ஒற்றுமையை பற்றிப் பேசிய பிரதமர் மோடி, ‘மணிப்பூரில் வன்முறை என்றால் அதன் வலி மகாராஷ்டிரத்தில் உணரப்படுகிறது’ என்றார்.
10வது ஆண்டாக சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்ப உறுப்பினர்கள் (பரிவர்ஜன்) என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தலைமையிலான சத்தியாகிரக இயக்கத்துக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். இத்தகைய தியாகிகளால்தான் நாடு சுதந்திரம் பெற முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டு தங்கள் உயிரைக் கொடுத்த அனைவருக்கும் அஞ்சலியை செலுத்துவதாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக பிரதமர் மோடி, ‘அடுத்து செங்கோட்டையில் கொடியேற்றும்போது மீண்டும் சந்திப்போம்’ என்று தனது உரையை முடித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள். முப்படை தளபதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.