சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைக்கு வந்து செந்தில் பாலாஜியை பார்த்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, அவரை ஜூன் மாதம் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நெஞ்சு வலியால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதையடுத்து, செந்தில் பாலாஜி குடும்பத்தினர் அந்த அறுவை சிகிச்சையை காவேரி மருத்துவமனையில்தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டற்கிணங்க அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
அதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் கடந்த ஜூலை 12ம் தேதியும் மீண்டும் ஜூலை 26ம் தேதியும் என இருமுறை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவல் இன்றோடு முடிவடைவதால், அவரை அமலாக்கத்துறையினர் காணொலிக் காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை நீட்டித்து, மூன்றாவது முறையாக உத்தரவிட்டு இருக்கிறது.