தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நேற்று இரவு முதல் பட்டாசு வெடித்து வருவதால் திடீரென காற்று மாசு அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான். இதையொட்டி பல்வேறு பகுதிகளில் மக்கள் நேற்று முதலே பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட துவங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் மாசடைவதாலேயே பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் மக்கள் அதை பொருட்படுத்தாமல் பட்டாசுகளை வெடிக்க தொடங்கியதால் தற்போது காற்று மாசு அதிகரித்துள்ளது.
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரத்தை Air Quality Index என அழைக்கப்படும்.
இதன் அளவானது 0 முதல் 50 ஆக இருந்தால் காற்று சுகாதாரமாக இருக்கிறது என அர்த்தம். அது போல் 51 முதல் 100 ஆக இருந்தால் திருப்திகரமாக இருக்கிறது என்பதாகும். 101- 200 வரை இருந்தால் காற்றின் தரம் சுமாராக இருக்கிறது என்பதாகும். 201 முதல் 300 வரை இருந்தால் காற்றின் தரம் மோசம் என்றும் 301- 400 அளவு இருந்தால் மிக மோசம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே 401 முதல் 500 வரை இருந்தால் அந்த இடம் ஆபத்துள்ள இடம் என்பது பொருளாகும்.
இது குறித்து தமிழ்நாடு மாசு காட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”சென்னையில் பெரும்பாலான இடங்களில் 101 முதல் 200 அளவில் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. பெருங்குடியில் 169, அரும்பாக்கத்தில் 134, கொடுங்கையூரில் 112, மணலியில் 109, ராயபுரத்தில் 121 என காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது. அது போல் கும்மிடிப்பூண்டியில் 230, வேலூரில் 123, கடலூரில் 112 என காற்றின் தரம் பதிவாகியுள்ளது. காற்று மாசு ஏற்பட்டால் சுவாச பிரச்சினைகள் ஏற்படும். ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும்.
மேலும் இதய பிரச்சினை உள்ளவர்களுக்கும் அசவுகரியத்தை தரும். ஆஸ்துமா இருப்போருக்கு மூச்சுதிணறலையும் ஏற்படுத்தும். இதனால் நம் உயிரையும் கருத்தில் கொண்டு, பிற உயிர்களையும் நினைத்து பட்டாசு வெடிப்பதை குறைத்தால் காற்று மாசுபடுவது குறையும்.