தில்லி மாநகராட்சி 
செய்திகள்

தில்லி மாநகராட்சி மேயர் - துணை மேயர் தேர்வு!

ஜெ.ராகவன்

தில்லி மாநாகராட்சி மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும், துணை மேயர் பதவிக்கு ஆலி முகமது இக்பாலும் ஆம் ஆத்மி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

39 வயதான ஷெல்லி ஓபராய், கிழக்கு படேல் நகர் வார்டில் போட்டியிட்டு முதன் முறையாக கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆலி முகமது இக்பால், சாந்தினி மகால் வார்டு கவுன்சிலர்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக ஓபராய் வருகை பேராசிரியாகப் பணியாற்றி வந்தார். இக்பால் இரண்டாவது முறையாக கவுன்சிலராகியுள்ளார். இவர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஷோயிப் இக்பாலின் மகன்.

ஐந்து வருடங்கள் கொண்ட மேயர் பதவிக்கு முதல் வருடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

தில்லி மாநாகராட்சி வரும் ஜனவரி 6 இல் கூடுகிறது. அப்போது தேர்வு செய்யப்பட்ட 250 கவுன்சிலர்களும் பதவியேற்று மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பார்கள். தவிர 6 பேர் கொண்ட நிலைக்குழுவும் தேர்ந்தெடுக்கப்படும்.

மேயர், துணை மேயர் பதவி தவிர நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு முகமது ஆமில் மாலிக் (ஸ்ரீ ராம் காலனி), ராமீந்தர் கெளர் (ஃப்தே நகர்), மோகினி ஜீன்வால் (சுந்தர் நகரி) மற்றும் சரிகா செளதுரி (தர்யா கஞ்ச) ஆகியோரை வேட்பாளர்களாக கட்சி தேர்வு செய்துள்ளது.

வருகிற 6 ஆம் தேதி மேயராக தேர்ந்தெடுக்கப்படுபவர் ஏப்ரல் மாதம் வரை பதவியில் இருப்பார். பின்னர் மீண்டும் தேர்தல் நடைபெறும். மேயர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும் என்றாலும், கட்சி மாறி வாக்களிப்பதைத் தடுக்க கட்சித் தாவல் தடை சட்டம் எதுவும் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 கூடுதல் செய்தி:

தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134 இடங்களிலும், பா.ஜ.க. 104 இடங்களிலும் வெற்றிபெற்றது. cக்கு வெறும் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சுயேச்சைகள் மூன்று இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT