செய்திகள்

தில்லி மேயர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு, உச்சநீதிமன்றம் செல்ல ஆம் ஆத்மி முடிவு!

ஜெ.ராகவன்

மேயர், துணை மேயர் தேர்ந்தெடுக்கப்படாமலேயே தில்லி மாநாகராட்சிக் கூட்டம் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. மேயர் தேர்தலை முறையாக நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி தெரிவித்தார்.

தில்லி மாநாகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க.விடமிருந்து ஆம் ஆத்மி கைப்பற்றியது.

தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் மேயர் தேர்தலை நடத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடந்த 6 மற்றும் 24 ஆம் தேதிகளில் மேயர் தேர்தலை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பா.ஜ.க. மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேயர் தேர்தலுக்காக திங்கள்கிழமை மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அவை கூடியதும் தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியான சத்ய சர்மா, மேயர், துணைமேயர், நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்ல, மேயர் தேர்தலில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தெரிவித்தார்.

இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் முகேஷ் கோயல், நியமன உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்படுவதாக சத்ய சர்மா தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான அதிஷி, தேர்தல் அதிகாரி சர்மா, முறைகேட்டில் ஈடுபடுகிறார். மேயர் துணை மேயர் தேர்தல் மட்டும்தான் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நிலைக்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடத்தி முறைகேட்டில் ஈடுபட சர்மா முயல்கிறார். எனவே தேர்தலை நியாயமான முறையில் நடத்தக்கோரி உச்சநீதிமன்றம் செல்லப்போகிறோம் என்றார்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT